இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவர்கள் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை


இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவர்கள் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை
x

இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவர்கள் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டிலும், விருதுநகர் சிறார் நீதிமன்ற குழுமத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கு

விருதுநகரை சேர்ந்த 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில், விருதுநகரை சேர்ந்த ஹரிகரன்(வயது 27), ஜுனத்அகமது(27), ரோசல்பட்டியைச் சேர்ந்த மாடசாமி(34) மற்றும் பிரவீன்(26) ஆகிய 4 பேர் மீதும், விருதுநகரைச் சேர்ந்த 4 சிறுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாநிலம் முழுவதும் இச்சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், 60 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

விசாரணை

இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை அதிகாரிகளாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி மற்றும் துணை சூப்பிரண்டு வினோதினி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதற்கிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிகரன் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 4 சிறுவர்களும் விருதுநகர் சிறார் நீதிக்குழுமத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 15 வயது சிறுவன், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் தன்னை தவறான பாதையில் வழி நடத்தினார் என்று நீதிபதிகளுக்கும், முதல்-அமைச்சருக்கும் மற்றும் சட்டப்பணிகள் குழுவிற்கும் மனு அனுப்பினான். இதனை தொடர்ந்து அந்த சிறுவன் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு நிஷாந்தினி முன்பு, 1 மணி 45 நிமிடங்கள் ரகசிய வாக்குமூலம் அளித்தான். பின்னர் இவ்வழக்கில் இருந்து ஒரு சிறுவனை விடுவிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்தநிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத்திடம், ஹரிகரன் உள்ளிட்ட 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகை 806 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்புடைய 84 ஆவணங்களையும் கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட 4 சிறுவர்களில் 3 பேர் மீது விருதுநகர் சிறார் நீதிக்குழும நீதிபதியும், விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டுமான கவிதா முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 15 வயது சிறுவன் இந்த வழக்கிலிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் விடுவிக்கப்பட்டுள்ளான்.


Next Story