அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம்


அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம்
x

இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரிகள் மற்றும் பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு குழு அலுவலக இயக்குனர் கர்னல் தீபக் குமார் தெரிவித்தார்.

விருதுநகர்

இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரிகள் மற்றும் பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு குழு அலுவலக இயக்குனர் கர்னல் தீபக் குமார் தெரிவித்தார்.

அக்னி வீரர்கள்

விருதுநகரில் நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:- திருச்சியில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக் குழு அலுவலகம் இயங்கி வரும் நிலையில் மயிலாடுதுறை முதல் கன்னியாகுமரி வரை 16 மாவட்டங்களில் இந்த அலுவலகம் ஆட்சேர்ப்பு பணியை மேற்கொள்கிறது. விருதுநகர் மாவட்டத்திலிருந்து தான் அதிக அளவில் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டத்தில் 105 அக்னிவீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் முதல் பிற பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் இந்திய ராணுவத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் பொது நுழைவுத் தேர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

இணையதளம்

2-வது கட்டத்தில் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அந்தந்த ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகங்களால் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் ஆட்சேர்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

அங்கு அவர்கள் உடல் தகுதி சோதனைகள் மற்றும் உடல் அளவீட்டுப்பணிகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதற்காக 3-வது கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் சேர இணையதளத்தில் வருகிற 23-ந் தேதி வரை இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யும் செயல்முறை நடைமுறையில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

தகுதி அடிப்படையில் தேர்வு

தொடர்ச்சியான ஆட்டோமெஷனின் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்தின் இணையதளம் இப்போது வெளிப்படைத்தன்மைக்காக பிஜி லாக்கருடன் இணைக்கப்பட்டுள்ளது. 176 இடங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.

விண்ணப்பதாரர்களுக்கு இந்த தேர்வு இடங்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுகள் உள்ளன. மேலும் அந்த தேர்வுகளில் இருந்து அவர்களுக்கு தேர்வு இடங்கள் ஒதுக்கப்படும் இணையவழி பொதுநுழைவு தேர்வு கட்டணம் ஒரு விண்ணப்பதாரருக்கு ரூ.500 ஆகும்.

அதில் 50 சதவீதம் செலவை ராணுவம் ஏற்கிறது. விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களை தெளிவாக்க உதவி மையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு 79961 57222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் எந்த இடைத்தரகருக்கும் இரையாக வேண்டாம். இந்திய ராணுவ சேவை ஆள்சேர்ப்பு முற்றிலும் பாரபட்சமற்ற மற்றும் தகுதி அடிப்படையில் ஆனது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story