இறையூர் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை


இறையூர் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
x

குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக இறையூர் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை நடத்தினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன் இறையூர் கிராமத்திற்கு நேற்று நேரில் சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டார். பின்னர் வெள்ளனூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தில்லைநடராஜன் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளிடம் இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:- இறையூர் வேங்கைவயல் வழக்கை பொறுத்த வரையில் எல்லா விதமான விசாரணையும் செய்துள்ளோம். சி.பி.சி.ஐ.டி.யிடம் இந்த வழக்கை அரசு வழங்கியுள்ளது. இதனை தோல்வி என்று பார்க்க முடியாது. காலதாமதம் இன்றி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் போலீசாருக்கு எந்தவிதமான அழுத்தமும் இல்லை.

இந்த வழக்கில் இன்னும் கூடுதலாக விசாரிக்க வேண்டி உள்ளது. அதனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிப்பார்கள். இது சவால் நிறைந்த வழக்கு தான். நுட்பமாகவும், அறிவியல் பூர்வமாகவும், சாட்சிகளின் அடிப்படையில் தான் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தமிழக போலீசார் மேற்கொண்ட விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story