ஓராண்டு பயிற்சி முடித்தவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தடை கேட்டு வழக்கு- மதுரை ஐகோர்ட்டில் இன்று விரிவான விசாரணை


ஓராண்டு பயிற்சி முடித்தவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தடை கேட்டு வழக்கு- மதுரை ஐகோர்ட்டில் இன்று விரிவான விசாரணை
x

ஓராண்டு பயிற்சி முடித்தவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் இன்று மதுரை ஐகோர்ட்டில் விரிவான விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை


ஓராண்டு பயிற்சி முடித்தவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் இன்று மதுரை ஐகோர்ட்டில் விரிவான விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயிற்சி அர்ச்சகர்

திருச்செந்தூர் கோவில் சுதந்திர பரிபாலன ஸ்தலத்தார்கள் சபையின் தலைவர் வீரபாகு, இணை செயலாளர் ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில் அந்த உத்தரவை மீறும் வகையில் இந்த கோவிலில் புதிதாக பயிற்சி முடித்த அர்ச்சகர்களை நியமிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே வேத, ஆகம விதிகளை முறையாக படித்து உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருசுதந்திரர்கள் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்த பதவிகளில் நியமிக்காமல் புதிதாக ஒரு வருடம் பயிற்சி முடித்த நபர்களை அரசு நியமிக்க முடிவு செய்துள்ளது ஏற்புடையதல்ல. அரசின் ஒரு வருட பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது. வேதங்கள் கற்பதற்கு ஐந்து, ஆறு வருடங்கள் ஆகும்.

ரத்து செய்யுங்கள்

மேலும் அவர்களுக்கு கோவில் நிதியிலிருந்து மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை. எனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பயிற்சி அர்ச்சகர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான அரசாணை மற்றும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வக்கீல் சிங்காரவேலன் ஆஜராகி, தமிழ்நாடு அரசின் அரசாணை சட்டவிரோதமானது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள உறுதிமொழிக்கு எதிராக உள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும். இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

விரிவான விசாரணை

பின்னர் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகநாதன் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆகியோர் ஆஜராகி, "இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த அர்ச்சகர் பயிற்சி என்பது, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களுக்கான அனுபவ பயிற்சிதான்" என்றனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விரிவான விசாரணைக்காக இந்த வழக்கை நாளைக்கு (அதாவது இன்று) ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


Next Story