மக்கள் நீதிமன்றம் மூலம் 1,707 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றம் மூலம் 1,707 வழக்குகளுக்கு தீர்வு
x

தஞ்சை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1,707 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1,707 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வுகாண தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகவேல், கூடுதல் சார்பு நீதிபதி முருகன், வக்கீல் வினோத்குமார் ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. போக்சோ நீதிமன்ற அமர்வு நீதிபதி சுந்தரராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கீதா, வக்கீல் செந்தில்குமார் ஆகியோர் கொண்ட 2-வது அமர்வில் குடும்பநல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

1,707 வழக்குகளுக்கு தீர்வு

முதன்மை சார்பு நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், விபத்து தீர்ப்பாயம் சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி, வக்கீல் சுந்தரி ஆகியோர் கொண்ட 3-வது அமர்வில் சிவில் வழக்குகள் மற்றும் காசோலை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. வங்கி வராக்கடன் வழக்கில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 91 ஆயிரத்து 50-க்கு தீர்வு காணப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அமர்வுகளோடு கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் திருவையாறு ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளில் நடத்தப்பட்ட விசாரணை மூலம் மொத்தம் 1,707 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 82 லட்சத்து 67 ஆயிரத்து 297 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது.இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தஞ்சை மாவட்ட வக்கீல்கள் சங்க உறுப்பினர்கள், வக்கீல்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுதா மற்றும் நிர்வாக அலுவலர்கள், சட்ட தன்னார்வலர்கள் செய்து இருந்தனர்.


Next Story