தொட்டிபாளையம் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்கு; ஈரோடு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


தொட்டிபாளையம் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்கு; ஈரோடு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x

தொட்டிபாளையம் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஈரோடு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு

தொட்டிபாளையம் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஈரோடு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

காட்டு முயல் வேட்டை

ஈரோடு வனச்சரகத்துக்குட்பட்ட பெருந்துறை அருகே உள்ள தோரணாவி தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள நிலங்களில் காட்டு முயல்கள் வேட்டுயாடப்படுவதாக தமிழ்நாடு வன உயிரின கட்டுப்பாடு கோவை மண்டல அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டார். அவரின் அறிவுறுத்தலின்பேரில், ஈரோடு மாவட்ட வனப்பாதுகாப்பு படையினர், ஈரோடு வனச்சரக குழுக்கள், ஈரோடு வனவியல் விரிவாக்க கோட்ட குழுக்கள் உள்பட பல்வேறு வனச்சரக குழுவினர் தொட்டிபாளையம் கிராமத்துக்கு விரைந்து சென்றனர்.

107 பேர் மீது வழக்கு

பின்னர் அவர்கள் வாட்ஸ்-அப் செயலி மூலம் காட்டு முயலை வேட்டையாடும் கும்பலை கண்காணித்தனர். பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள நிலங்களில் கும்பல் கும்பலாக ஏராளமானோர் காட்டு முயலை வேட்டையாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

உடனே வனத்துறை அலுவலர்கள் அவர்களை மடக்கி பிடித்தனர். மொத்தம் 107 பேர் பிடிபட்டனர். இவர்கள் மீது, ஈரோடு வனத்துறையினர், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த 5 முயல்கள், வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகள், கத்தி, அரிவாள் மற்றும் அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்களையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆடி மாதம் கோவில் திருவிழாவையொட்டி ஒருசில சமூகத்தினர் காட்டு முயலை வேட்டையாடுவதற்காக கும்பல் கும்பலாக காட்டுப்பகுதிக்கு செல்வார்கள் என்றும், அவ்வாறு சென்றவர்கள் தான் இவர்கள் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story