கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 6:46 PM GMT)

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை நேரில் பார்த்த கலெக்டர் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்தில் தடுப்பு கட்டை, கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிரயாப்பாளையம் அருகே உள்ள கோமுகி அணை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 57). விவசாயியான இவர் சின்னசேலத்தை அடுத்த கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று கருந்தலாக்குறிச்சிக்கு சென்ற ஆறுமுகம் நிலத்தில் விளைந்த வெண்டைக்காய்களை அறுவடை செய்து மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு கச்சிராயப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

விவசாயி பலி

சின்னசேலம் அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் துணை மின் நிலையம் எதிரே சாலையை கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கலெக்டர் உத்தரவு

அப்போது சின்னசேலம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து விட்டு அந்த வழியாக வந்த கலெக்டர் ஷ்ரவன்குமார் இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே காரில் இருந்து இறங்கி சம்பவ இடத்துக்கு வந்த அவர் பலியான ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கவும், சம்பவ இடத்தில் இனி வருங்காலங்களில் விபத்துகள் நடக்காமல் தடுக்க அங்கு தடுப்பு கட்டைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்கவும், சாலை பாதுகாப்புபணிகளை மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த விபத்து குறித்து ஆறுமுகத்தின் மகன் அருண்குமார்(24) கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story