வரதராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் கார் கண்ணாடி உடைப்பு - தேர்தல் ஒத்திவைப்பு


வரதராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் கார் கண்ணாடி உடைப்பு - தேர்தல் ஒத்திவைப்பு
x

வரதராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளது. 42 ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு தலைவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அக்டோபர் மாதம் 22-ந்தேதி நடைபெற்று துணைத்தலைவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதில் வரதராஜபுரம் ஊராட்சியில் மட்டும் போதிய வார்டு உறுப்பினர்கள் வராததால் துணைத்தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. இதனைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தேர்தலை தேர்தல் அதிகாரிகள் தள்ளிவைத்தனர். பின்னர் மீண்டும் நவம்பர் மாதம் 29-ந்தேதி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அன்றும் போதிய உறுப்பினர்கள் வராததால் துணைத்தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் அதிகாரிகளால் நேற்று துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வரதராஜபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜலட்சுமி, மேற்பார்வையாளர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், ஊராட்சி செயலர் ஹரி முன்னிலையில் நடைபெற இருந்தது.

மொத்தம் 6 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். மறைமுக தேர்தலில் வாக்களிக்க 3 வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்தனர்.

ஊராட்சி மன்ற அலுவலக பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் 3 வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நோக்கி காரில் வந்தபோது தி.மு.க.வை சேர்ந்த ஒரு தரப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் வந்த காரை மறித்து மிரட்டியுள்ளனர். பெண் வார்டு உறுப்பினர் வந்த கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. வை சேர்ந்த 2 பேர் போட்டியிடுவதால்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலை முறையாக நடத்த காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைத் தலைவர் தேர்தல் குறித்து உதவித் தேர்தல் அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் தெரிவிக்கையில் துணைத் தலைவர் தேர்தல் பதவிக்கு போதிய உறுப்பினர்கள் வராததால் துணைத்தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story