சாலை மைய தடுப்பு கட்டையில் கார் மோதல்: 3 சுகாதார ஆய்வாளர்கள் படுகாயம்


சாலை மைய தடுப்பு கட்டையில் கார் மோதல்:  3 சுகாதார ஆய்வாளர்கள் படுகாயம்
x

வெள்ளியணையில் சாலை மைய தடுப்பு கட்டையில் கார் மோதி 3 சுகாதார ஆய்வாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

சுகாதார ஆய்வாளர்கள்

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா தரகம்பட்டி கே.கே. எம் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 40), அதே பகுதியை கொசூரை சேர்ந்தவர் குமரேசன் (31), காக்கயம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (37). இதில் மகேஸ்வரன் தோகைமலை அருகே உள்ள சேப்பலாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகவும், குமரேசன் மற்றும் கண்ணன் இருவரும் தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று அவர்களின் பதவி உயர்வுக்கான சான்றிதழ்களை கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்காக ஒரு காரில் சென்றனர். பின்னர் சான்றிதழ்களை சமர்ப்பித்து விட்டு மாலையில் வெள்ளியணை வழியாக வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை மகேஸ்வரன் ஓட்டி சென்றார்.

கார் விபத்தில் படுகாயம்

அந்த கார் வெள்ளியணை வடக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கரூர்-திண்டுக்கல் சாலையின் மைய தடுப்பு கட்டையின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துகுறித்து ெவள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story