தேர்தல் பத்திரம் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பா.ஜ.க.வின் சதிகார அரசியலை தோலுரித்துள்ளது - முத்தரசன்


தேர்தல் பத்திரம் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பா.ஜ.க.வின் சதிகார அரசியலை தோலுரித்துள்ளது - முத்தரசன்
x

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேர்தல் பத்திரம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, பா.ஜ.க.வின் சதிகார அரசியலை தோலுரித்து தோரணம் கட்டுவதாக அமைந்துள்ளது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பா.ஜ.க. மத்திய அரசு 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்பட ஐந்து நீதிபதிகள் அமர்வு ஒருமனதாக வழங்கியுள்ள தீர்ப்பு, நாட்டின் ஜனநாயக வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக விளங்கும்.

பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டுக் களவாணியாக செயல்படும் பா.ஜ.க. மக்கள் வாக்குரிமையை தேர்தல் சந்தையில் வாங்கும் பண்டமாக மாற்றி சிறுமைப்படுத்தி வந்ததை சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளது. இதன்மூலம் வாக்குகள் மூலம் ஆட்சி அமைக்கும் அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் யார், யார், எந்தெந்த கட்சிகள், எந்தெந்த நிறுவனங்களிடம் எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளது என்பதை பாரத ஸ்டேட் வங்கி தனது இணைய தளத்தில் ஏப்ரல் 13-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, பா.ஜ.க.வின் சதிகார அரசியலை தோலுரித்து தோரணம் கட்டுவதாக அமைந்துள்ளது. மக்கள் கொண்டாடி மகிழ தக்க சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது."

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.


Next Story