வளர்ப்பு யானையை உரிமையாளரிடம் ஒப்படைக்கலாமா?-தலைமை வனப்பாதுகாவலர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவு


வளர்ப்பு யானையை உரிமையாளரிடம் ஒப்படைக்கலாமா?-தலைமை வனப்பாதுகாவலர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவு
x

வளர்ப்பு யானையை உரிமையாளரிடம் ஒப்படைக்கலாமா? என தலைமை வனப்பாதுகாவலர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை


நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த கவுதம் ராஜா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- வனத்துறையின் முறையான அனுமதி பெற்று சுந்தரி என்ற யானையை வளர்த்து வந்தேன். சில வாரங்களுக்கு முன்பு, எனது வளர்ப்பு யானைக்கு 60 வயதாகி விட்டதாகவும், அதன் கண்பார்வை மிகவும் மங்கிவிட்டது என்று கூறி தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவின் பேரில், யானையை பறிமுதல் செய்து திருச்சி யானைகள் முகாமில் வைத்து பராமரித்து வருகின்றனர். எனவே, தலைமை வனப்பாதுகாவலரின் உத்தரவை ரத்து செய்து யானையை மீண்டும் என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, "வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள யானை மிகவும் எடைகுறைந்து உடல் மெலிந்து, காலில் வலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளது", என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், யானைக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, முகாமில் இருக்கும் வளர்ப்பு யானையை மனுதாரர் வாரம் ஒரு முறை சென்று பார்க்கலாம். அதற்கு தேவையான பிடித்தமான உணவுகளை வழங்கவும் அனுமதிக்கப்படுகிறது. அத்துடன், இந்த யானையை மனுதாரரிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்து தமிழக தலைமை வனப்பாதுகாவலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Next Story