பாளையங்கோட்டை அம்மன் கோவில்களில் கால்நாட்டு நிகழ்ச்சி
தசரா திருவிழாவை முன்னிட்டு, பாளையங்கோட்டை அம்மன் கோவில்களில் கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
தசரா திருவிழாவை முன்னிட்டு, பாளையங்கோட்டை அம்மன் கோவில்களில் கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
தசரா திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தசரா திருவிழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சி, பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
கால்நாட்டு நிகழ்ச்சி
காலையில் கால்கோள் விழாவுக்கான கொடிக்கம்பம் அர்ச்சனை செய்யப்பட்டு, ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோவில் முன்பு கால் நாட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
இதேபோன்று பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில், தெற்கு முத்தாரம்மன் கோவில், வடக்கு முத்தாரம்மன் கோவில், வடக்கு உச்சினிமாகாளி அம்மன் கோவில், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன் கோவில், விஸ்வகர்ம தெரு உச்சினிமாகாளி அம்மன் கோவில், தூத்துவாரி அம்மன் கோவில், உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் தசரா திருவிழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.