முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைக்க உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இன்று முதல் 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். இதையடுத்து சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
துபாய் சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.6,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. துபாய் பயணத்தின் போது ஒப்பந்தமான 6 நிறுவனங்கள் பணிகளை தொடங்கிவிட்டன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டு லட்சத்து 95 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
நான்கு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவே ஜப்பான், சிங்கப்பூர் சுற்றுப்பயணம். முதலீட்டார்களை சந்தித்து உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பான் நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்க மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கீட்டோ நகரிலும் ஜப்பானிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுதொடர்பாக ஜப்பான் தொழில்துறை அமைச்சருடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் பயணத்தை தொடர்ந்து, ஜப்பானில் சில நாட்கள் தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டோக்கியோ நகரில் 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.