வேங்கைவயல் சம்பவத்தை கண்டித்து தலையில் தண்ணீர் குடத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்- போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு


வேங்கைவயல் சம்பவத்தை கண்டித்து தலையில் தண்ணீர் குடத்துடன் வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

வேங்கைவயல் சம்பவத்தை கண்டித்து தலையில் தண்ணீர் குடத்துடன் வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேங்கைவயல் சம்பவம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் வித, விதமான வேடம் அணிந்து வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.

இந்தநிலையில் நேற்று நிறைவு நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. சக்திவேல் என்பவரது தலைமையில் பிரபாகரன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வந்தார். அப்போது அவர்கள் தலையில் குடத்துடன் வந்தனர். அந்த குடங்களில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

வாக்குவாதம்

குடங்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது மாநகராட்சி அலுவலக கட்டிடத்தின் நுழைவு வாயில் வரை குடங்கள் செல்ல இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து அலுவலக வளாக நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து குடத்தில் உள்ள தண்ணீரை அங்கேயே கீழே ஊற்றிவிட்டு, அலுவலக கட்டிட நுழைவு வாயில் வரை குடங்களை கொண்டு சென்றார்கள்.

இதேபோல் அகில இந்திய தமிழ் திருமேனி சங்கத்தை சேர்ந்த சாமியார் திருமலை ராமலிங்கம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். மேலும், அக்னி ராமச்சந்திரன் என்பவர் ரூ.20 நோட்டுகளை மாலையாக அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.


Next Story