ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை- அமைச்சர் சேகர்பாபு பேட்டி


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை- அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தீவிர வாக்குசேகரிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கை சின்னத்துக்கு தீவிர வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஈரோடு மரப்பாலம் வீதிகளில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

எதிரிகள் தெரியவில்லை...

இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை. ஈரோடு மாநகராட்சியில் 33 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்றன. இதில் 32 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கவுன்சிலர்களாக உள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் ஆனாலும் சரி, அதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தல் ஆனாலும் சரி அ.தி.மு.க.வுடன் போட்டியிட்டு தான் தி.மு.க. கூட்டணி பெரிய வெற்றி பெற்றுள்ளது. மேலும் தற்போது பல்வேறு புதிய கட்சிகள் தி.மு.க.வில் இணைந்துள்ளன. எதிர் அணியில் உள்ள ஒரு சில கட்சியினர் நடுநிலை வகிக்கின்றனர். பல கட்சிகள் களத்துக்கே வரவில்லை.

நீட் தேர்வு

இந்த நிலையில் தி.மு.க. என்பது தன்னையும், தன்னுடைய தோழமையையும் நம்பி நிற்கின்ற இயக்கம். எனவே இதற்கு பொய்க்கால் தேவை இல்லை. வலுவான ஒரு கூட்டணி தலைமையிலே அமைந்திருக்கின்ற இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 80 சதவீத வாக்குகளை அள்ளுவதற்குரிய அறிகுறிகள் தேர்தல் களத்திலே தெரிகிறது.

நீட் தேர்வை அ.தி.மு.க.வினர் ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில் நுழைய விட்டனர். தமிழக முதல்-அமைச்சரை பொறுத்த வரையில், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்குமாறு தொடர்ந்து மத்திய அரசிடமும், சட்டத்தின் வாயிலாக சட்ட போராட்டங்களையும் நடத்தி கொண்டிருக்கிறார். முதல் - அமைச்சர் ஒன்றை தொட மாட்டார். தொட்டால் அதை இறுதிவரை விட மாட்டார்.

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

அப்போது அமைச்சர்களுடன், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஈரோடு மாநகராட்சி 39-வது வார்டு செயலாளர் கே.டி.மகேஷ்வரன், 39-வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலி செந்தில்குமார், கருங்கல்பாளையம் மக்கள் சேவை மைய தலைவரும், தி.மு.க. பிரமுகருமான கேபிள் செந்தில்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story