ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல்


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல்
x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. 4-வது நாளான நேற்று தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தலைமை தேர்தல் பணிமனையில் அண்ணா நினைவை போற்றும் வகையில் அவரது உருவப்படத்துக்கு வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து வேட்பாளர் மற்றும் தேர்தல் ஆணையம் விதியின் படி 4 பேர் காரில் புறப்பட்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

வேட்புமனு தாக்கல்

முன்னதாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் வேட்புமனுக்களை சரிபார்த்து தயாராக வைத்திருந்தனர். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவர் செல்வபெருந்தகை, எம்.பி.க்கள் அ.கணேசமூர்த்தி (ம.தி.மு.க.), அந்தியூர் ப.செல்வராஜ் (தி.மு.க.), தி.மு.க கொள்கை விளக்க அணி துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் உடன் வந்தனர். வேட்புமனுவில் அதிகாரிகள் முன்னிலையில் கையொப்பமிட்ட வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமாரிடம் வேட்புமனுவை வழங்கினார். இந்த நிகழ்வின்போது உதவி தேர்தல் அதிகாரி முத்துக்கிருஷ்ணன் உடன் இருந்தார்.

பாதுகாப்பு

நட்சத்திர வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்ததை முன்னிட்டு நேற்று ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் போலீசார் பணியில் இருந்தனர். மாநகராட்சி அலுவலக வாயில் கதவு வழியாக உள்ளே நுழைந்த அனைவரும் போலீசாரால் விசாரிக்கப்பட்டனர். தகுந்த காரணம் இன்றி யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அலுவலக வாசலில் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு இருந்தது.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆனந்தகுமார், சேகர், அண்ணாதுரை, பவித்ரா, இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், தெய்வராணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


Next Story