பெரம்பலூரில் கிராம ஊராட்சி தலைவர், 2 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடக்கிறது


பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி தலைவர், 2 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

பெரம்பலூர்

போட்டியின்றி தேர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 4 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் ஒன்றியம், கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜெகவள்ளியும், ஆலத்தூர் ஒன்றியம், இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மணியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறாது.

இதையடுத்து, மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், பிலிமிசை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வி.களத்தூர் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தலா 2 பேரும் போட்டியிடுகின்றனர். நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பதால் அந்தப்பகுதிகளில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

வாக்குச்சாவடி மையங்கள்

மேலப்புலியூர் கிராம ஊராட்சியில் வாக்களிக்க 9 வாக்குச்சாவடிகளும், பிலிமிசை 4-வது வார்டுக்கும், வி.களத்தூர் 7-வது வார்டுக்கும் தலா ஒரு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்காளர்களுக்கு பூத் சீலிப் அரசு அலுவலர்களால் வழங்கப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் வாக்குச்சாவடிக்கு தேவையான வாக்குப்பதிவு பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றை அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் கொண்டு செல்கின்றனர். முன்னதாக வாக்கு பெட்டிகளையும், வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களையும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

தேர்தல் பணியில் 44 அரசு அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 120 போலீசாரும் ஈடுபடவுள்ளனர். முன்னதாக இடைத்தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களையும், வாக்கு எண்ணும் மையங்களையும் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவின் பேரில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நாராயணன், தேர்தல் பிரிவு அலுவலர்களும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் 2,424 ஆண் வாக்காளர்களும், 2,525 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4,949 பேர் வாக்களிக்க உள்ளனர்.

பிலிமிசை 4-வது வார்டு இடைத்தேர்தலில் 105 ஆண் வாக்காளர்களும், 112 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 217 பேரும், வி.களத்தூர் 7-வது வார்டு இடைத்தேர்தலில் 166 ஆண் வாக்காளர்களும், 206 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 372 பேரும் வாக்களிக்க உள்ளனர்.

15-ந்தேதி பதவி ஏற்பு

வாக்குப்பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வருகிற 12-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெறுபவர்களும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் 15-ந்தேதி பதவி ஏற்க உள்ளனர்.


Next Story