ஊஞ்சலூர் அருகே பரபரப்புமர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள்-38 கோழிகள் செத்தன;விவசாயிகள் அச்சம்


ஊஞ்சலூர் அருகே பரபரப்புமர்ம விலங்கு கடித்து  15 ஆடுகள்-38 கோழிகள் செத்தன;விவசாயிகள் அச்சம்
x

ஊஞ்சலூர் அருகே மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள், 38 கோழிகள் செத்தன. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளார்கள்.

ஈரோடு

ஊஞ்சலூா்

ஊஞ்சலூர் அருகே மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள், 38 கோழிகள் செத்தன. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளார்கள்.

ஆடு-கோழிகள்

ஊஞ்சலூர் அருகே உள்ள இச்சிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில்புதூர் வாய்க்கால்செட் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55). விவசாயியான இவர் வீட்டின் அருகே பட்டி அமைத்து அதில் ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ஆடு, கோழிகளுக்கு தீவனம் வைத்தார். பின்னர் பட்டியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கடித்து குதறல்

நேற்று காலை பட்டியை திறப்பதற்காக சண்முகம் வந்தார். அப்போது 3 ஆடுகள், 4 ஆட்டு குட்டிகள், 35 கோழிகள் ரத்த வழிய செத்துக்கிடந்தன.

இதேபோல் துரைசாமி (60) என்பவரின் தோட்டத்தில் கட்டியிருந்த 6 ஆட்டு குட்டிகள், 2 கோழிகள், மற்றொரு விவசாயி முத்துசாமி (52) என்பவரின் பட்டியில் ஒரு ஆட்டு குட்டி, வாய்க்கால் செட் என்ற இடத்தில் விஷ்ணு பிரியன் (32) என்பவரது பட்டியில் ஒரு பெரிய ஆடு, ஒரு கோழி ஆகியவையும் கடித்து குதறப்பட்ட நிலையில் செத்துக்கிடந்தன.

விவசாயிகள் திரண்டனர்

நேற்று முன்தினம் இரவு ஏதோ மர்ம விலங்கு 4 இடங்களிலும் புகுந்து ஆடுகளையும், கோழிகளையும் வேட்டையாடி இருப்பது தெரிந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறைக்கும், அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்தார்கள்.

அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் சுதா, நித்ய கவுசல்யா ஆகியோர் சம்பவ இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டுவிட்டார்கள்.

பரபரப்பு

விவசாயிகள் தகவல் கூறிய பின்னரும் வனத்துறையினர் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக கூறினார்கள். இதற்கிடையே ஈரோடு வனச்சரகர் சுரேஷ் ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தார்.

கரட்டாம்பாளையம் கால்நடை டாக்டர் ஜெயலட்சுமி செத்துக்கிடந்த ஆடு, கோழிகளின் உடல் மாதிரிகளை எடுத்து பிரேத பரிசோதனைக்காக வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அதன் முடிவு வந்த பிறகு ஆடு, கோழிகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது என்று தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

4 இடங்களில் விவசாயிகள் வளர்த்து வந்த ஆடு, கோழிகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது அந்த பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story