கடலூர் சில்வர் பீச்சில் 'பன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி


கடலூர் சில்வர் பீச்சில் பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 Aug 2023 6:45 PM GMT (Updated: 27 Aug 2023 6:46 PM GMT)

போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வாக கடலூர் சில்வர் பீச்சில் ‘பன் ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகமாக நடனமாடினர்.

கடலூர்

கடலூர்

'பன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி

தமிழக அரசு, போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை இணைந்து கடலூர் சில்வர் பீச்சில் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் அனைத்து பொதுமக்களிடமும் போதை பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'பன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

காலை 6 மணி முதல் 9.30 மணி வரை இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்ததும் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் காலை 5.30 மணிக்கே சில்வர் பீச்சில் குவிய தொடங்கினர். தொடர்ந்து சில்வர் பீச்சில் அமைக்கப்பட்ட திறந்த வெளி மேடையில் காலை 6 மணிக்கு பிறகு நிகழ்ச்சி தொடங்கியது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் அதை பயன்படுத்துவதை தடுப்பது குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் பேசுகையில், சில்வர் பீச் பகுதியை பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நடக்கும் பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை போல் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் கடலூரில் புத்தகத்திருவிழா மற்றும் கடலூர்-30 என்ற நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். கடலூரை போதை பொருட்கள் இல்லா மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.

ஆடி, பாடி உற்சாகம்

அதன்பிறகு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் மல்லர் கம்பம், சிலம்பம், சினிமா பாடல்கள், சிறுவர்கள், பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, போலீசாரின் மோப்ப நாய்களான லியோ, கூப்பர், லிசாவின் சாகச நிகழ்ச்சிகள், நடனம், போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகம், மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

நடனம் மற்றும் சினிமா பாடல்களுக்கு வயது வித்தியாசமின்றி அங்கு திரண்டு நின்ற ஆயிரக்கணக்கானோர் ஆடி, பாடி மகிழ்ந்தனர். குறிப்பாக இதில் வயதானவர்களை விட அதிக அளவில் இளைஞர்கள், இளம்பெண்களே குவிந்து இருந்தனர். அவர்கள் அனைவரும் பாடகர்களின் பாடல்களுக்கு ஏற்பவும், கலைக்குழுவினரின் நடனத்திற்கு ஏற்பவும் பாடல்களை பாடியும், நடனமாடியும் உற்சாகம் அடைந்தனர். இதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களும் உற்சாக நடனம் ஆடினர். இந்த நிகழ்ச்சி 9.30 மணி அளவில் முடிவடைந்தது.


Next Story