நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்


நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
x

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

அரியலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

சுக்கிரன் ஏரியில் நீர்மட்டம் குறைவாக உள்ளது. புள்ளம்பாடி வாய்க்கால் வழியாக கூடுதலாக தண்ணீர் கொண்டு வந்து பிப்ரவரி இறுதிவரை விவசாய பாசனத்துக்கு வழங்க வேண்டும். தா.பழுவூர் பகுதி விவசாயிகள் பயன் தரும் வகையில் பொண்ணாறு தலைப்பில் நிரந்தரமாக தடுப்பு சுவர் கட்டி தண்ணீர் தடுத்து தண்ணீரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். சுக்கிரன் ஏரியின் பாசன பகுதியான சிலுப்பனூர், நானாங்கூர், ஆதனூர், ஓரியூர், கோமான் ஆகிய கிராமங்களை டெல்டா பாசன பகுதியாக மாற்றம் செய்ய வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் இடையில் கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

சார்பதிவாளர் அலுவலகம்

மாவட்டத்தில் இயங்கி வரும் அந்தந்த அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போடுபவர்கள் நிலையத்திற்கு நெல் கொண்டு வரும் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு லஞ்சமாக தருபவரையும் பெறுபவரையும் மாவட்ட நிர்வாகம் தக்க தண்டனை தரவேண்டும்.

தா.பழூர் ஒன்றியம் வெண்மான் கொண்டான் கிழக்கு அணிக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட அணிக்குறிச்சி, நரியங்குழி, கோரைக்குழி உள்ளிட்ட கிராமங்கள் இதுநாள் வரை விக்கிரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடைபெற்றது. தற்போது உடையார்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றியுள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள், உழவர்கள் நலன் கருதி மீண்டும் விக்கிரமங்கலம் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் ஆவண செய்ய வேண்டும்.

தடுப்பணை

பருக்கல் ஊராட்சி பருக்கல் முதல் அழிசுடி வரை சுமார் 100 விவசாயிகள் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் விவசாய இடுப்பு பொருட்கள் மற்றும் அறுவடை செய்த பொருட்களை கொண்டு சேருவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும் பாதையும் குண்டும், குழியுமாக உள்ளது. சீரமைத்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்களை கொண்டு விவசாய வேலைக்கு பயன்படுத்த வேண்டும். அரியலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி கோட்டமாக இருந்தபோது வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஓட்டக்கோவில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆணைவாரி ஓடையில் முகப்பு பகுதியில் நீர் தேக்க தடுப்பணை அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 5 காலமாக தடுப்பணையின் பக்கவாட்டுக் கறைகளில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் சேமிக்க வழி இல்லாமல் வீணாக சென்று கடலில் கலக்கிறது. சிதிலமடைந்த நீர்த்தேக்க தடுப்பணையின் கறைகளை சீர் செய்து விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும்.

சர்க்கரை ஆலை

ஆண்டிமடம் தாலுகா குவாகம், அய்யூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக தங்களுடைய கரும்பை அரசு கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு சர்க்கரை ஆலையில் பதிய உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில் ஒரு நாளைக்கு ஒரு லோடு என்ற கணக்கில் கரும்பு ஏற்றி சென்றுள்ளனர். இதனால் வெட்டிய கரும்பு 3 நாட்கள் காய்கிறது. இதனால் எடை குறைகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோத்தாரி சர்க்கரை ஆலைக்கு மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நெல் தயாராக உள்ள இடத்தில் முதலில் திறக்க வேண்டும்.

ஏரியில் தண்ணீர் இல்லை

கொள்ளிடம், மருதையாறு மற்றும் கல்லாறு உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மழைக்காலங்களில் கடலில் கலக்கும் நீரை மற்ற ஏரிகளில் சேமித்து வைக்க வேண்டும். இந்த ஆண்டு மழை பெய்தது. ஆனால் எந்த ஏரியிலும் தண்ணீர் இல்லை. ஆகையால் மழைக்காலங்களில் ஆற்று நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்வதற்கு வடிகால் வாய்க்கால் அமைத்து ஏரியில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story