கோவில் உண்டியலை உடைத்து திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 9 Aug 2023 6:45 PM GMT (Updated: 9 Aug 2023 6:46 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே மண்மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சிவன் கோவிலில் கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. நேற்று காலை கோவில் பூசாரி பூஜைக்காக கதவை திறந்து பார்த்தபோது கோவில் உண்டியல் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தொியவந்தது. இதையடுத்து கோவில் பூசாரி உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவரும், ஊர் பொதுமக்களும் கோவிலுக்கு திரண்டு வந்து பார்த்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 12 மணியளவில் இளைஞர்கள் கோவிலுக்குள் நடமாடியது தொியவந்துள்ளது. எனவே அவர்கள் தான் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்று இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான இளைஞர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story