பா.ஜ.க. எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் - வைகோ


பா.ஜ.க. எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்  - வைகோ
x

தோழமை கட்சியினர் ஒற்றுமையை பலப்படுத்தினால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர முடியாது என வைகோ கூறியுள்ளார்.

திருப்பூர்,

திருப்பூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூரில் துளிர் விட்டு அல்ல, வேர் விட்டு வரலாறு படைத்தது. கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க காலத்தில் அனுபவித்தது கொஞ்சம் நஞ்சம் அல்ல. தூக்குமேடையை இவர்கள் அலங்கரித்தார்கள். பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கி குண்டுகளுக்கும், தூக்கு கயிறுகளுக்கும் அஞ்சாமல் இருந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

நல்லக்கண்ணு வீரம் நிறைந்தவர். எதற்கும் அஞ்சாதவர். அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பானவர். உயிர்பலிக்கு அஞ்சாமல் நல்லக்கண்ணு போராடி கட்சியை வளர்த்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு இப்பொழுது வந்த அரசு சனாதன அரசாக , இந்துத்துவா திணிக்கின்ற அரசாக உள்ளது. ஒரே மொழி, ஒரே நாடு என்பதை திணிக்கிறது. ஒரே நாடாக அமைந்தால் சோவியத் யூனியன் போல பிரிந்து போகும் சூழல் ஏற்படும்.

அனைத்து மதம் மற்றும் மொழிக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். ஆயுதப் போராட்டத்தை நாம் கையில் எடுக்க தேவையில்லை. மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் மோடி அரசு அம்பானி மற்றும் அதானி போன்றவர்களுக்காக ஆட்சி நடத்துகின்றனர். திருப்பூரில் நாம் எடுத்துக் கொள்ளும் உறுதி என்பது சனாதன சக்திகளை ஒரே மொழி என்று கூறுபவர்களை முறியடிக்க எடுத்துக் கொள்ளும் உறுதியாகும்.

தி.மு.க. மீதான தோள் கொடுக்கும் தோழமை தொடர்ந்து வளரும். பா.ஜ.க. எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் அவர்கள் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். தோழமைக் கட்சிகள் ஒன்றாக இணைந்து எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் இந்த ஒற்றுமையை பலப்படுத்தினால் தமிழகத்தில் பா.ஜ.க. தலை எடுக்க முடியாது.

நமக்கு கடமை இப்பொழுதுதான் ஆரம்பிக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. தலைகாட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஆலயங்கள் பற்றி அவர்கள் பேசுகின்றனர். நாம் ஆலயங்களுக்கு விரோதிகள் அல்ல. அதே நேரம் பகுத்தறிவு கருத்துக்களை பேசுபவர்கள். அந்த பகுத்தறிவு கருத்துக்களை கூற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story