வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:46 PM GMT)

தமிழ்நாட்டில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெறும் என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி கூறினார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

செயற்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், செயலாளர் ஆர்.எம்.ஹரி, பொதுச்செயலாளர்கள் ஜெயதுரை, தியாகராஜன், துணை தலைவர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க.மாநில பொதுச்செயலாளரும், வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கார்த்தியாயினி கலந்து கொண்டு பேசும்போது, தமிழ்நாட்டில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெறும். கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இளந் தலைமுறையினரை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட இலவச கழிப்பறையை கட்டண கழிப்பறையாக மாற்றி கட்டணம் வசூலிப்பதை கண்டிப்பதோடு, நகராட்சி அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிப்பறையின் ஒரு பகுதியை இடித்து விட்டு ஓட்டல் கட்டியிருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது, கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளம்பார் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், சின்னசேலம் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய போதிய வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும், துர்நாற்றம் வீசுவதால் உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் ஆர்ச் அருகில் இயங்கி வரும் மீன் மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் வக்கீல்.செல்வநாயகம், சிறுபான்மை அணி பொருளாளர் ஸ்ரீசந்த், பட்டியல் அணி மாநில செயலாளர் பாண்டியன், தொழில் பிரிவு மாநில செயலாளர் பாலாஜி, மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு தலைவர் விக்னேஷ், மாவட்ட துணைத் தலைவர் சர்தார்சிங், பொருளாளர் குமரவேல், துணைதலைவர் சத்தியசீலன், செயலாளர் ரமேஷ், விவசாயஅணி திட்டபொறுப்பாளர் குருமூர்த்தி, உள்ளாட்சிபிரிவு ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் முருகன், மாவட்ட தலைவர் பிரபாரி பாலு, மகளிர் அணி தலைவி அலமேலு ஆறுமுகம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் உளுந்தூர்பேட்டை நகர தலைவர் காந்தி நன்றி கூறினார்.


Next Story