நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: கண்டித்த போலீஸ்காரை தள்ளிவிட்ட 3 பேர் கைது


நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: கண்டித்த போலீஸ்காரை தள்ளிவிட்ட 3 பேர் கைது
x

திருச்சியில் டாஸ்மாக் கடை அருகே நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதை கண்டித்த போலீஸ்காரை தள்ளிவிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

பிறந்த நாள் கொண்டாட்டம்

திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 23). இவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இதையொட்டி அன்று இரவு சார்லஸ், அவரது நண்பர்கள் பாரதிநகரை சேர்ந்த முகமதுரியாஸ்கான் (22), சுப்பையாதெருவை சேர்ந்த மணிகண்டன் (23), பாண்டி ஆகிய 4 பேரும் மணல்வாரித்துறை டாஸ்மாக் கடை அருகில் நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த பாலக்கரை போலீஸ்காரர் ராஜபாண்டி, ஊர்க்காவல் படை வீரர் தினேஷ் ஆகியோர் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்களை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் போலீஸ்காரர் ராஜபாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி தள்ளிவிட்டனர். இதில் அவருக்கு பின்னந்தலையில் அடிபட்டது.

3 பேர் கைது

இதில் காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்லஸ், முகமதுரியாஸ்கான், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய பாண்டியை தேடி வருகிறார்கள்.


Next Story