சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
தென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்து உள்ளது. 1,455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், ஜீர்கள்ளி, விளாமுண்டி, டி.என்பாளையம், கடம்பூர் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
பறவைகள் கணக்கெடுப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று தொடங்கியது. இந்த 10 வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட பறவையாளர்கள், வன ஆர்வலர்கள், வனவர்கள், வனக்காவலர்கள் ஆகியோரை கொண்ட தனிக்குழுவினர் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
50-க்கும் மேற்பட்ட...
தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் வனச்சரகர் சதீஸ் தலைமையில் வனத்துறையினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இதில் மலபார் கிளி, மஞ்சள் பிடரி சின்ன மரங்கொத்தி, சின்ன மின்சிட்டு, கருந்தலை மாங்குயில், பட்டாணிக் குருவி, பொறிமார்பு சிலம்பன், துடுப்பு வால் கருச்சான், வெண் வயிற்று கருச்சான், வெண் கன்னக் குக்குருவான், அரசவால் ஈப்பிடிப்பான் என 50-க்கும் மேற்பட்ட நிலவாழ் பறவை இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.