பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஆன்லைன் வசதி


பவானி சங்கமேஸ்வரர் கோவிலில்  பக்தர்கள் காணிக்கை செலுத்த ஆன்லைன் வசதி
x

ஆன்லைன் வசதி

ஈரோடு

பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை ஆன்லைன் மூலம் செலுத்தும் வகையில் புதிதாக 'கியூ ஆர்' கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சங்கமேஸ்வரர் கோவில்

தென்னிந்தியாவில் உள்ள சிறப்பு வாய்ந்த 7 சிவன் கோவில்களில் ஒன்றாக ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் இங்குள்ள கூடுதுறையில் காவிரி ஆறு மற்றும் பவானி ஆறுடன், கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் இங்கு சங்கமித்து செல்வதாக ஐதீகம்.

இதனால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து இங்குள்ள கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மனையும், ஆதிகேசவ பெருமாள் உடனமர் சீதேவி- பூதேவியையும் வணங்கி செல்வார்கள்.

திரளான பக்தர்கள்

குறிப்பாக ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் இங்குள்ள கூடுதுறையில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை வணங்கி சென்றால் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

இதனால் மேற்கண்ட அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் இங்கு வந்து தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து செல்வர். மேலும் திருமண தடை, செவ்வாய் தோஷம், நாக தோஷம் உள்பட பல்வேறு தோஷங்கள் விலக பரிகார பூஜைகள் செய்யவும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவார்கள்.

ஆன்லைன் வசதி

அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் சாமியை வணங்கிய பின்னர் தங்களுடைய காணிக்கைகளை கோவிலில் உள்ள உண்டியலில் செலுத்தி செல்வார்கள். பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் வளாகத்தில் 15 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பக்தர்கள் தங்களுடைய காணிக்கைகளை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் புதிதாக 'கியூ ஆர்' கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வரி விலக்கு

இதுகுறித்து கோவில் நிர்வாக துணை ஆணையாளர் சாமிநாதன் கூறுகையில், 'கோவில் நிர்வாகம் சார்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள 'கியூ ஆர்' கோடு வசதி மூலம் பக்தர்கள் தங்களுடைய காணிக்கைகளை செலுத்தினால் அது கோவில் வங்கி கணக்குக்கு நேரடியாக சென்றுவிடும்.

மேலும் பக்தர்கள் அதிக அளவில் காணிக்கை செலுத்தும்போது அதற்கான வரிவிலக்கு பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்,' என்றார்.


Next Story