சென்னை: நடைபாதையில் தூங்கியவர் மீது ஏறி இறங்கிய சொகுசு கார் - ஆந்திர எம்.பி. மகள் கைது


சென்னை: நடைபாதையில் தூங்கியவர் மீது ஏறி இறங்கிய சொகுசு கார் - ஆந்திர எம்.பி. மகள் கைது
x
தினத்தந்தி 18 Jun 2024 1:46 PM GMT (Updated: 19 Jun 2024 7:15 AM GMT)

சென்னை பெசன்ட் நகர் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் மீது சொகுசு கார் ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 22). இவர் நேற்று மாலை பெசன்ட் நகர் காலாசேத்ரா காலனி வரதராஜ் சாலை அருகே நடைபாதையில் படுத்து தூங்கியுள்ளார்.

அப்போது, அந்த சாலையில் தாறுமாறாக வந்த சொகுசு கார் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் சூர்யா மீது ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சூர்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடைபாதையில் படுத்து உறங்கிய இளைஞர் சூர்யா மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய காரில் இரு பெண்கள் இருந்துள்ளனர். இதில் காரை இயக்கிய பெண் விபத்தை ஏற்படுத்திய உடன் சம்பவ இடத்திலிருந்து காருடன் தப்பி சென்றுவிட்டார். காரில் உடன் அமர்ந்திருந்த பெண் விபத்து குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரும் அங்கிருந்து தப்பியோடினார். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த இரு பெண்களும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் மீது காரை ஏற்றி கொன்றுவிட்டு தப்பியோடிய பெண்களை கைது செய்யக்கோரி சூர்யாவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். விபத்து நேற்று மாலை ஏற்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகள், கார் பதிவெண், தப்பியோடிய பெண்களின் புகைப்படங்கள் ஆகிய ஆதாரங்கள் இருந்தும் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை என உயிரிழந்த சூர்யாவின் உறவினர்கள் பெசன்ட் நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பெசன்ட் நகரில் கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய பெண்ணை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது ஆந்திர எம்.பி.யின் மகள் பீடா மாதுரி என்பது தெரியவந்தது. இதையடுத்து பீடா மாதுரியை போலீசார் இன்று கைது செய்தனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி ஆவார். பெசன்ட் நகரில் கார் விபத்தை ஏற்படுத்தி இளைஞர் உயிரிழப்பிற்கு காரணமான பீடா மாதுரியை போலீசார் கைது செய்தனர்.


Next Story