போட்டோகிராபரை ஹெல்மெட்டால் அடித்துக்கொன்று புதைத்த கணவர்


போட்டோகிராபரை ஹெல்மெட்டால் அடித்துக்கொன்று புதைத்த கணவர்
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)

பெண்ணை பற்றி இணையதளத்தில் பதிவிடுவேன் என மிரட்டியதால், போட்டோகிராபரை கண்மாய்க்கு வருமாறு அழைத்து அங்கு ஹெல்மெட்டால் அடித்து அந்த பெண்ணின் கணவர் கொன்றார். அவரையும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை

பெண்ணை பற்றி இணையதளத்தில் பதிவிடுவேன் என மிரட்டியதால், போட்டோகிராபரை கண்மாய்க்கு வருமாறு அழைத்து அங்கு ஹெல்மெட்டால் அடித்து அந்த பெண்ணின் கணவர் கொன்றார். அவரையும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.

போட்டோகிராபர்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜேசுவரி. இவருடைய மகன் சரவணமருது (வயது 32), போட்டோகிரபர். கடந்த 14-ந்தேதி, வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் ராஜேசுவரி, ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது சரவணமருதுவுக்கும், சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது பற்றி தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணின் கணவர் சக்திவேலிடம்(36) விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. பின்னர் சக்திவேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் சரவணமருதுவை கொன்று கண்மாயில் புதைத்ததாக தெரிவித்தார்.

திருமணமான பெண்ணுடன் தொடர்பு

போலீசார் நடத்திய விசாரணையில்,, சக்திவேலின் மனைவிக்கும் சரவணமருதுவுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. அந்த பெண் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வந்தநிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த பெண்ணுடன் போனில் பேசி, மீண்டும் பழக நினைத்துள்ளார்.

இந்த விவகாரம் சக்திவேலுக்கு தெரியவந்தது. எனவே மனைவியின் செல்போனை வாங்கிக்கொண்டார். அது தெரியாமல் சரவணமருது அந்த பெண்ணிற்கு தொடர்ந்து செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில், நான் சொல்வதைதான் கேட்க வேண்டும், அப்படி இல்லையென்றால் நீ என்னுடன் இருப்பதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார்.

நேரில் வரவழைத்து கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்காக தனது உறவினர்களான திருவாதவூர் சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜபிரபு (31), முருகன் (56) ஆகியோரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து சரவணமருதுவை திருவாதவூருக்கு வரவழைத்து கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி மனைவியின் செல்போன் மூலம் சரவணமருதுவுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

அதில் "நீ திருவாதவூருக்கு புறப்பட்டு வா, அங்குள்ள கண்மாய் பகுதியில் உல்லாசமாக இருக்கலாம்" என்று தெரிவித்திருந்தார். அதைப்பார்த்த சரவணமருது சம்பவத்தன்று திருவாதவூருக்கு வந்தார். அங்கு தயாராக இருந்த 3 பேரும் சேர்ந்து அவரை ஹெல்மெட்டால் சரமாரியாக தாக்கினர். அதில் தலையில் படுகாயம்அடைந்த சரவண மருது சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அவரது உடலை அப்பகுதியில் ஒரு இடத்தில் குழி தோண்டி புதைத்து விட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

3 பேர் கைது

அதை தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சக்திவேல், ராஜபிரபு, முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தன் மனைவி பற்றி இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக சக்திவேல் போலீசாரிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. சரவணமருதுவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story