கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு


கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு
x

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வினை 13,435 பேர் எழுதினர்.

அரியலூர்

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் "புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 5,420 கற்போர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு 273 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 8,015 கற்போர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு 400 மையங்களிலும் தன்னார்வலர்கள் மூலம் கடந்த 3 மாதங்களாக பயிற்சி வழங்கப்பட்டது.

மதிப்பீட்டு தேர்வு

அதனை தொடர்ந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு நேற்று நடந்தது. 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நடந்த இந்த தேர்வு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வர்கள் தங்களுக்கு ஒத்து வரும் நேரத்தில் தங்களுக்கான தேர்வு மையங்களுக்கு வந்து 3 மணி நேரம் தேர்வு எழுதி சென்றனர்.

தேர்வு மையங்களுக்கு அப்பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளராக செயல்பட்டனர். தேர்வு அறை கண்காணிப்பாளராக தன்னார்வலர்கள் செயல்பட்டனர். தேர்வில் தேர்ச்சி பெறும் கற்போர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம், பாடாலூரில் நடந்த கற்போர்களுக்கான தோ்வினை கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் ஒருங்கிணைப்பாளர் சோபியா பேரளி, குன்னம், சடைக்கன்பட்டி, அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்வினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் நடந்த தேர்வினை முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சோபியா அரியலூர் மாவட்டத்தில் வாலாஜா நகரம், அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்வினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story