வாலிபர் கொலையில் தாய், மகளின் ஜாமீன் மனு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு


வாலிபர் கொலையில் தாய், மகளின் ஜாமீன் மனு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு
x

வாலிபர் கொலையில் தாய், மகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்தூரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவருடைய மகள் மரியா (வயது 24). இவருக்கு திருமணமாகி, கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இதனால் தனது குழந்தையுடன் இலத்தூர் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இவரது தாயார் மற்றும் குடும்பத்தினரும் இதே பகுதியில் வசித்து வந்தனர்.

அப்போது அருகில் வசித்த வாலிபருடன் மரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த வாலிபர் கட்டாயப்படுத்தி உள்ளார். இருவரும் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டியும் மிரட்டி வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மரியா, சம்பவத்தன்று வாலிபரை தன் வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பிணத்தை என்ன செய்வதென்று தெரியாமல், தன் தாயாரையும் உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வாலிபர் உடலை அங்குள்ள கழிவறை தொட்டியில் போட்டுவிட்டனர். சில மாதங்கள் கழித்து கழிவறை தொட்டியை சுத்தம் செய்தபோது, எலும்புகள் கிடந்தன. உடனடியாக இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில் மரியா நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார். அதன்பேரில் அவரையும், தாயாரையும் போலீசார் கடந்த ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. அவர்களுக்கு ஜாமீன் அனுமதிக்கக்கூடாது என வாதாடினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.


Next Story