சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்
x
தினத்தந்தி 23 Jun 2023 7:00 PM GMT (Updated: 24 Jun 2023 11:55 AM GMT)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதோடு, சைக்கிள் ஊர்வலமும் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

தேனி

விழிப்புணர்வு போட்டிகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந்தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே கூறியதாவது:-

தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு உட்கோட்டத்திலும் தலா 10 பள்ளிகளில் ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 5 உட்கோட்டத்தில் மொத்தம் 50 பள்ளிகளில் இந்த போட்டிகள் இன்று (சனிக்கிழமை) வரை நடக்கிறது.

பள்ளி அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேனியில் நடக்கும் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழாவில் கலெக்டர் ஷஜீவனா பரிசுகள் வழங்கி பாராட்டுகிறார்.

சைக்கிள் ஊர்வலம்

மேலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடக்கிறது. தேனி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கும் இந்த ஊர்வலம் மதுரை சாலை, பழைய பஸ் நிலையம், நேரு சிலை சிக்னல், கம்பம் சாலை, பழனிசெட்டிபட்டி, போடி விலக்கு வழியாக சென்று மீண்டும் பழனிசெட்டிபட்டி, நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை, அல்லிநகரம் வழியாக அன்னஞ்சி விலக்கு வரை நடக்கிறது.

அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் 5 உட்கோட்டங்களிலும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்புடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story