நாட்டின் சிறந்த திட்டமாக வந்தே பாரத் ரெயில் திட்டத்திற்கு விருது


நாட்டின் சிறந்த திட்டமாக வந்தே பாரத் ரெயில் திட்டத்திற்கு விருது
x

நாட்டின் சிறந்த திட்டமாக வந்தே பாரத் ரெயில் திட்டத்திற்கு விருது.

சென்னை,

உலகப் புகழ்பெற்ற ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எப். விளங்குகிறது. இங்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், விரைவுப் பயணத்தை அடிப்படையாக கொண்டு 'வந்தே பாரத்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த வகையில், முதல் வந்தே பாரத் ரெயில் கடந்த 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த ரெயிலின் சேவை டெல்லி - வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி தொடங்கியது.

தற்போது, வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றது. தெற்கு ரெயில்வேயில் சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. பயணிகள் வரவேற்பு அதிகரித்துள்ளதால் வந்தே பாரத் ரெயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 2023-24-ம் நிதியாண்டில் சென்னை ஐ.சி.எப்-பில் மட்டும் 736 வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்திய திட்ட மேலாண்மை நிறுவனத்திடம் இருந்து சென்னை ஐ.சி.எப்., இந்தியாவின் முதல் அதிவேக ரெயில் திட்டப் பிரிவில், வந்தே பாரத் ரெயில் திட்டத்திற்கு 2023-ம் ஆண்டின் நாட்டின் சிறந்த திட்டத்திற்கான விருதினை பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இணையதளம் மூலம் நடைபெற்ற இந்த விழாவில், நிதி ஆயோக் நிறுவன இயக்குனர் விஜய்குமாரிடமிருந்து ஐ.சி.எப். பொது மேலாளர் பி.ஜி. மல்லையா விருதை பெற்றுக்கொண்டார்.


Next Story