"பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனிக்கு விருது" - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், ஸ்ரீகாந்த் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முகமது ஆஷிக் ஆகியோர் மாநில இளைஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவரஞ்சனியும் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நெல் ஜெயராமனுக்கு பின் பல மாநிலங்களுக்கு சென்று 1250 நெல் ரகங்களை மீட்டு எடுத்தவர் ஆவார்.
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தேர்வாகியுள்ள இவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதும் , ரூ.1 லட்சம் பரிசு தொகையும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.