கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய சம்பவம்: போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம்


கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய சம்பவம்: போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம்
x

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பெண் போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்து மாநகர கமிஷனர் உத்தரவிட்டார்.

திருச்சி,

ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் போலீஸ் ஏட்டுக்கு, ஒரு ஆட்டோ டிரைவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருடன் அவர் பழகுவதையும், பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். இதனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபத்தில் இருந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவருடன் பெண் போலீஸ் ஏட்டு உல்லாசமாக இருந்த சம்பவம் அவருக்கு தெரியவந்தது. உடனே அவர் ஆட்டோ டிரைவரை தேடினார்.

அப்போது, சேலம் ரோட்டில் ஆட்டோ டிரைவர் செல்வதாக தகவல் கிடைக்கவே, அவர், தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு, சிறுகாம்பூர் அருகே ஆட்டோ டிரைவரை மறித்து தாக்கிவிட்டு சென்றுவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, சம்பந்தப்பட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரையும், ஏட்டையும் ஆயுதப்படைக்கு மாற்றினார். இந்தநிலையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரையும், பெண் போலீஸ் ஏட்டையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்.


Next Story