ஓசூர் வீரர்கள் பதக்கங்கள் பெற்று சாதனை
இந்திய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் ஓசூர் வீரர்கள் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர்.
ஓசூர்
கொல்கத்தாவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் இந்திய அளவிலான மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது. ஓசூரில் கடந்த மாதம் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் வெற்றிபெற்ற 330 தடகள விளையாட்டு வீரர்கள் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டனர். இதில் ஓசூரை சேர்ந்த 20 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 9 பேர் 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் பெற்று சாதனை படைத்தனர். தமிழக அணி மொத்தம் 70 தங்கம், 64 வெள்ளி மற்றும் 93 வெண்கலம் பதக்கங்கள் வென்று 622 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்து, தேசிய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றுள்ளது. ஓசூரை சேர்ந்த வீரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் பிலிப்பைன்சில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியை கிருஷ்ணகிரி மாவட்ட மூத்தோர் தடகள செயலாளர் செபாஸ்டியன் வழிநடத்தி ஒருங்கிணைத்தார்.