அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு; 19 பேர் காயம்


அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு; 19 பேர் காயம்
x

அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அப்போது காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர்.

மதுரை

அலங்காநல்லூர்,


அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அப்போது காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் உள்ள பால மரத்தம்மன்-சுந்தரவள்ளி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு விழா நேற்று நடந்தது. இதில் வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் கிராம கோவில் மாடுகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

அதன் பின்னர் சீறிப்பாய்ந்து வந்த முரட்டு காளைகளை வீரர்கள் போட்டி போட்டு பிடித்தனர். பல காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் சவால் விட்டு சிட்டு போல் பறந்து சென்றன.

வாடிவாசல் முன்பாக வீரர்களுக்கும், காளைகளுக்கும் பாதுகாப்பாக தென்னை நார் மஞ்சிகள் விரிக்கப்பட்டிருந்தன.

ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்திருந்தனர். இதுபோக மைதானத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த கேலரிகளில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

19 பேர் காயம்

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் 725 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 335 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகளும், மிக்சி, மின்விசிறி, டி.வி., வாசிங்ெமஷின், குக்கர், சில்வர், பித்தளை பாத்திரங்கள், சைக்கிள், பிளாஸ்டிக் சேர், உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின்போது மாடு முட்டி 19 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அலங்காநல்லூர், அய்யங்கோட்டை அரசு மருத்துவமனை குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக வலசை பெரிய மொண்டி(வயது 22), அரியூர் கோபி (20), பாலமேடு அன்புராஜ்(25), அவனியாபுரம் விஜய் (21) ஆகிய 4 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை அ.புதுப்பட்டி கிராம மக்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் மேற்பார்வையில் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்ட்ர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.


Next Story