மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதால்,ஆயுள்தண்டனை கைதிக்கு பரோல் கேட்ட மனு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதால்,ஆயுள்தண்டனை கைதிக்கு பரோல் கேட்ட மனு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 Jun 2023 12:08 AM GMT (Updated: 21 Jun 2023 10:23 AM GMT)

மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதால், ஆயுள்தண்டனை கைதிக்கு பரோல் கேட்ட மனு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என் கணவர் கந்தசாமி. ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் எங்கள் மகளுக்கு வருகிற 28-ந்தேதி பூப்புனித நீராட்டு விழா நடத்த உள்ளோம். இந்த நிகழ்ச்சியில் என் கணவர் பங்கேற்கும் வகையில் அவருக்கு 5 நாள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, மனுதாரர் ஏற்கனவே உடல்நிலை உள்ளிட்ட காரணங்களை கூறி அவரது கணவருக்கு 2 முறை பரோல் பெற்றுள்ளார். தற்போதும் பரோல் கேட்டு இருப்பதால், அவருடைய கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. மேலும் மனுதாரர் கணவருக்கு விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த மனு நிலுவையில் உள்ளது. சட்டப்படி மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது கைதிக்கு பரோல் வழங்க முடியாது என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், மனுதாரரின் கணவருக்கு விதித்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதால், மனுதாரர் கணவருக்கு பரோல் கேட்ட மனுவை இந்த கோர்ட்டு பரிசீலிக்க முடியாது. எனவே மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு உரிய பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story