கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்


கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்
x

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட சிறப்பு முகாம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் உரிமை திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் முதற்கட்டமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக கடந்த 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடைபெற்றது.

மேற்படி நாட்களில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து உள்ளார்.

சிறப்பு முகாம்

எனவே தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத்திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யஇன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) என 3 நாட்களில் ஏற்கனவே முகாம்கள் நடைபெற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான குடும்பத்தலைவிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story