கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்- இல்லத்தரசிகள் கருத்து


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்- இல்லத்தரசிகள் கருத்து
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்- இல்லத்தரசிகள் கருத்து

ஈரோடு

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், வயல்வெளிகளில் வேளாண் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள், மீனவ மகளிர்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்கு பணிபுரியும் பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.1,000 கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டது இல்லை. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதற்கு "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

ரூ.7 ஆயிரம் கோடி நிதி

இந்த புதிய திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிட்டு உள்ளது.

அதில் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில்தான் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பல்வேறு பொருளாதார தகுதிகளும் வரையறுத்து வெளியிடப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக நடப்பு நிதி ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் இதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு ரேஷன் கடை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களில் எத்தனை பேர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து பெண்கள் என்ன சொல்கிறார்கள்? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

சாப்பாட்டுக்கே வழியில்லை

ஈரோடு புதுமை காலனி பகுதியை சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்துவரும் காமிலா:-

எனது கணவர் இறந்துவிட்ட நிலையில் எனது மகளை 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்து கட்டி கொடுத்து விட்டேன். தற்போது நான் தனியாக வசித்து வருகிறேன். பூக்கட்டும் தொழிலில் ஈடுபட்டு அதில் வரும் வருவாய் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறேன். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 ரூபாய் தான் கிடைக்கும். இதைக்கொண்டு தான் வீட்டு வாடகை, மருத்துவ செலவு மற்றும் சாப்பிட வேண்டும். பூக்கட்டும் தொழில் இல்லை என்றால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போய்விடும்.

கடந்த 2 நாட்களாக தொழில் இல்லாததால் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறேன். மேலும் திடீரென உடல்நிலை சரியில்லை என்றால் யாரிடம் பணம் கேட்பது என்று கூட தெரியாத நிலையில் தவித்து வருகிறேன். என்னை போன்றவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் உழைக்க ஆள் இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக இந்த உரிமைத்தொகை கொடுக்கவேண்டும்.

நிபந்தனை விதித்திருப்பது ஏமாற்றம்

ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி 3-வது வீதியை சேர்ந்த ஜெ.என்.லட்சுமி நீலகண்டன்:-

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தற்போது நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசியல் லாபத்துக்காக ஒரு திட்டத்தை கொண்டு வருவது போன்ற பார்வை ஏற்படுகிறது. ஒரே பகுதியில் வசிக்கும் மக்களிடையே ஒரு தரப்பினருக்கு உரிமைத்தொகையை வழங்கிவிட்டு, மற்றொரு தரப்பினருக்கு வழங்காமல் இருந்தால் மனவேதனையை ஏற்படுத்தும்.

அதாவது ஒரு குடும்பத்தினருக்கு உரிமைத்தொகை கொடுக்கும்போது, அதற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் வருமானம் குறைந்த குடும்ப தலைவிக்கு கிடைக்காதபோது தேவையில்லாத வருத்தத்தை ஏற்படுத்தும். இதையெல்லாம் தவிர்க்க அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.

அனைவருக்கும் உரிமைத்தொகை

ஈரோடு சாஸ்திரிநகர் வேலவன்நகரை சேர்ந்த டி.எஸ்.ராதிகா சிவக்குமார்:-

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதேசமயம் அதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளால் ஏராளமானோருக்கு, உரிமைத்தொகை தங்களுக்கு கிடைக்குமா? என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது அனைவருக்கும் இலவசமாக டி.வி. வழங்கப்பட்டது. வேறுபாடு இல்லாமல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் டி.வி. கிடைத்தது. அதுபோல் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளபடி எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும்.

மகிழ்ச்சி

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்த ரமிஜா பானு கூறியதாவது:-

மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் அரசு ரூ.1,000 வழங்குவதாக தெரிவித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொகை எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். 2 மகன்கள் எனக்கு இருந்த போதும் யாரும் என்னை கவனிப்பதில்லை. கிடைக்கும் வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறேன்.

என்னை போன்ற ஏழை-எளிய பெண்களுக்கு இந்த உதவி தேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதவித்தொகை வழங்குவதில்லை. கட்சி நிர்வாகிகள் தலையீடு இருக்கக்கூடாது. உண்மையிலேயே என்னை போன்று கஷ்டப்படும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை சென்று சேர அரசு வழிவகை செய்ய வேண்டும். காலதாமதம் இன்றி உடனடியாக இந்த உரிமைத்தொகையை வழங்க வேண்டும்.

வரிப்பணம் வீணாகிறது

ஈரோடு அருகே கவுண்டச்சிபாளையம் புதுவலசு பகுதியை சேர்ந்த கே.எஸ்.ராஜேஸ்வரி சீனிவாசன்:-

தேர்தல் வாக்குறுதி தரும்போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை என்று கூறிவிட்டு தற்போது தகுதியடையவர்களுக்கு மட்டும் என்று கூறி பல விதிமுறைகளை அறிவித்து இருப்பது ஏற்புடையதல்ல. ஏற்கனவே இலவசம் என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

உரிமைத்தொகை கொடுக்கும் திட்டம் அனைத்து ஏழை மக்களையும் சென்றடைவதில்லை. அதற்கு பதிலாக சாலையோரம் சிறு வணிகம் செய்யும் பெண்களான பூக்கடை, இட்லி கடை, டீ கடை, காய்கறி கடை, பழக்கடை வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் தள்ளு வண்டிகளை கொடுத்து உதவலாம்.

விலைவாசி உயர்வு

ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ். நகர் செந்தில் கார்டன் பகுதியை சேர்ந்த சரண்யா கவுதம்:-

தமிழக அரசு மகளிருக்கு உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 விரைவில் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதை வழங்கினால் மட்டும் எனது கஷ்டம் தீர போவதில்லை. தற்போது காய்கறி விலை, மளிகை பொருட்கள் விலை, கியாஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல் -டீசல் விலை என எதை எடுத்தாலும் விலை ஏறிக்கொண்டு தான் செல்கிறது. இந்த விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்தினாலே எங்களை போன்றவர்களுக்கு பெரும் தொகை மிச்சப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story