கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
x

மதுரை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

வங்கி பரிவர்த்தனை

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இந்த திட்ட தொடக்க விழா, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொய்கைக்கரைப்பட்டி கிராமத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி மகளிருக்கு உரிமைத்தொகைக்கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "எல்லோர்க்கும் எல்லாம்" என்ற நோக்கில் திராவிட மாடல் ஆட்சி வழங்கி வருகிறார். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வழியில் மகளிர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவித்திடும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்கள் மகளிரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

பெண்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சமவாய்ப்பை ஏற்படுத்தி சமுதாயத்தில் தலைநிமிர்ந்து கம்பீரமாக நடக்க செய்தது இந்த திராவிட மாடல் அரசு. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் பெண்களும் பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஏற்படுத்தி அவர்களுக்கு சுழல் நிதி கடனுதவி வழங்கி சுயதொழில் செய்திட ஊக்குவித்து வருவதும் இந்த திராவிட மாடல் அரசு.

முன்னோடி

அண்ணா பிறந்த நாளான இன்று (நேற்று) குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" என்ற மகத்தான திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், மாநில அளவில் 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. அதில் பயன்பெற தகுதி இருந்தும் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை தகுதியான பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை, துணை தலைவர் பாலாண்டி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஆலத்தூர் ராஜவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒத்தக்கடை ரகுபதி, நரசிங்கம் ஊராட்சி தலைவர் ஆனந்த், ஒத்தக்கடை ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி சரவணன், காத கிணறு ஊராட்சி தலைவர் செல்வி சேகர், அழகர்கோவில் தி.மு.க. கிளைச் செயலாளர் முத்து பொருள், ஞானமலை கொடிக்குளம் ஊராட்சி தலைவர் திருப்பதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரசாமி, வேலவன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மேலமடை அழகு பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story