'நீட்' தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு தேர்வர்களுக்கு முககவசம் வழங்க ஏற்பாடு


நீட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு தேர்வர்களுக்கு முககவசம் வழங்க ஏற்பாடு
x

‘நீட்’ தேர்வு வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால்டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்வர்களுக்கு தேர்வு மையத்திலேயே முககவசம் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2022-23-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுத இருக்கின்றனர்.

இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை, தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. தேர்வர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று அவர்களுக்கான ஹால்டிக்கெட்டை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.30 மணிக்குள் இருக்க வேண்டும்

தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்டில் தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவுரைகள் தெளிவாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதன்படி, தேர்வு மையத்துக்குள் காலை 11.40 மணியில் இருந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர, ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் தங்கள் கையில் வெளிப்படையான தண்ணீர் பாட்டில், 50 மி.லி. சானிடைசர் பாட்டில் கொண்டு செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஹால்டிக்கெட்டை அதில் கேட்கப்பட்டு இருக்கும் விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

முககவசம் வழங்கப்படும்

தற்போது கொரோனா நோய் தொற்று இருப்பதால், தேர்வர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தேர்வு மையத்திலேயே தேர்வர்களுக்கு முககவசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால், அவர் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story