ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது


ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு  சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது
x
தினத்தந்தி 6 July 2024 5:13 AM GMT (Updated: 6 July 2024 5:37 AM GMT)

ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. . இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.


Next Story