போலி எண்களை பயன்படுத்தி வாகனங்கள் இயக்கப்படுகிறதா? 'செயலி' மூலம் போலீசார் சிறப்பு சோதனை


போலி எண்களை பயன்படுத்தி வாகனங்கள் இயக்கப்படுகிறதா? செயலி மூலம் போலீசார் சிறப்பு சோதனை
x

போலி எண்களை பயன்படுத்தி வாகனங்கள் இயக்கப்படுகிறதா? என ‘செயலி’ மூலம் போலீசார் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை

சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் போலியான வாகன எண்களை பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. அதே போன்று போலி நம்பர் பிளேட்டை பொருத்தி போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சிலர் துணிச்சலாக வலம் வருகின்றனர். வாகன எண்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பரிவாஹன் இணையதளம் மூலம் வாஹன் செயலியை சென்னை போக்குவரத்து போலீசார் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் முக்கிய சந்திப்புகளில் இந்த செயலியை பயன்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். 4 ஆயிரத்து 633 வாகனங்களின் எண்ணை, ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் மட்டும் 999 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த சோதனையில் குறைபாடு உள்ள நம்பர் பிளேட்டுகளை பொருத்திருந்த சில வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த சோதனை தொடரும் என்றும், போலி நம்பர் பிளேட்டுகள் பொருத்திய வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story