இணையதளம் மூலமாக மோசடி செய்த ரூ.10 லட்சம் மீட்பு:சைபர் கிரைம் தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு


இணையதளம் மூலமாக மோசடி செய்த ரூ.10 லட்சம் மீட்பு:சைபர் கிரைம் தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 5 March 2023 6:47 PM GMT)

இணையதளம் வழியாக பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.10 லட்சத்தை மீட்டு ஒப்படைத்ததற்காக சிவகங்கை சைபர் கிரைம் போலீசாரை டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டினார்.

சிவகங்கை

சிவகங்கை,

இணையதளம் வழியாக பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.10 லட்சத்தை மீட்டு ஒப்படைத்ததற்காக சிவகங்கை சைபர் கிரைம் போலீசாரை டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டினார்.

இணையதள மோசடி

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி வைகை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 32). பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது வங்கி கணக்கில் இணைக்கப்பட்டு இருந்த செல்போன் எண்ணை மர்மநபர்கள் சிலர் மாற்றம் செய்து உள்ளனர். பின்னர் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை மோசடி செய்தனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் கோடீஸ்வரன் புகார் செய்தார். இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், கோடீஸ்வரன் வங்கிக்கணக்கில் இருந்து மோசடியாக பெறப்பட்ட ரூ.10 லட்சம் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு வங்கி கிளைக்கு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பாராட்டு

பின்னர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தவமுனி, போலீஸ்காரர்கள் உடையனசாமி, கொத்தாள முனியாண்டி, சாணக்கியன், வினோத்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் குர்கான் வங்கிக்கு சென்றனர். அங்கு வங்கி அதிகாரிகளிடம் இந்த மோசடி குறித்து விளக்கினர். இதையடுத்து அந்த தொகையை வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதை மீட்டு வந்த போலீசார், ரூ.10 லட்சத்தை கோடீஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து மோசடி தொகையை விரைவாக மீட்டுத்தந்த சைபர் கிரைம் போலீசாருக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி, சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.


Next Story