திருவாடுதுறை ஆதீன நிலங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமனம்


திருவாடுதுறை ஆதீன நிலங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமனம்
x

திருவாடுதுறை ஆதீன மட நிலங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமனம் செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

திருவாடுதுறை ஆதீன மட நிலங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமனம் செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆதீன நிலங்கள்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிவஇளங்கோ என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருவாடுதுறை ஆதீனத்திற்கு நெல்லை மாவட்டம், ராதாபுரம், அடாங்கார்குளம், தெற்கு வள்ளியூர், இருக்கந்துறை, பழவூர், செம்பிகுளம், சவுந்தரலிங்கபுரம் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆதீன மடத்தின் அனுமதியுடன் பல வருடங்களாக இந்த நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய நிலத்தில் 3 தலைமுறைக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் திருவாடுதுறை ஆதீன மடத்தின் ஆய்வாளர், ஒவ்வொரு குத்தகைதாரர்களிடம் இருந்தும் பல லட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு குறைவான தொகைக்கு ரசீதுகளை கொடுத்து வருகிறார். ஆதீனத்திற்கு சேர வேண்டிய சொத்துக்களை மோசடி செய்கின்றனர். மடங்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிடவும், சொத்துகள் மற்றும் கணக்குகள் தொடர்பாகவும், பிற ஆவணங்களை ஆய்வு செய்யவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. எனவே குத்தகை பணத்திற்கான ரசீதை முறையாக கொடுக்காமல் மோசடியாக குறைந்த தொகை ரசீது கொடுத்து ஏமாற்றும் சுசீந்திரம் பகுதி திருவாடுதுறை ஆதீன நிர்வாக ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஆதீன நிலங்களை குத்தகைக்கு விடவும், குத்தகை முறையை ஒழுங்குபடுத்தவும் ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆக்கிரமிப்புகளை அளக்க விடாமல் ஊர் மக்கள் மிரட்டுகிறார்கள், என ஆதீனமடம் சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.

நீதிபதிகள் நியமனம்

அதனை தொடர்ந்து, "குத்தகை பணம் நேரடியாக மடத்திற்கு செல்லாமல் ஒரு சிலர் அபகரிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு மட்டும் ரசீது தருவதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளது. எனவே இந்த வழக்கில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்களை நிர்வகிப்பதில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகளை சீர்செய்து முறைப்படுத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் ராமநாதன் மற்றும் செல்வம் ஆகியோர் நீதிபதி கமிஷனர்களாக நியமிக்கப்படுகிறார்கள்" என நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story