தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம்-தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்


தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம்-தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களாக நியமனம் பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

ஆதிதிராவிடர் நல பள்ளிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப்பள்ளிகளான தேனூர் (2 பணியிடங்கள்), அயன்பேரையூர், வேலூர், நத்தக்காடு, சிறுகன்பூர், ஆதனூர், அய்யனார்பாளையம், நெய்குப்பை, அ.மேட்டூர் ஆகிய பள்ளிகளில் (தலா ஒரு பணியிடம்) இடைநிலை ஆசிரியர் பணியிடமும், ஈச்சம்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல உயர்நிலைப்பள்ளியில் ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் காலிப்பணியிடங்களாக உள்ளன.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

8-ந்தேதிக்குள்...

விண்ணப்பதாரர்களிடம் இருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள், உரிய கல்வி தகுதி சான்று நகல்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 8-ந்தேதி மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாத ஊதியம் இடைநிலை ஆசிரியர் நிலையில் ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.15 ஆயிரம் மட்டும். இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும். கல்வி தகுதி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகே உள்ள பகுதியிலுள்ள கல்வி தகுதி பெற்ற இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வரும் தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணி நாடுனர்கள் இருப்பின் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும்

பெரம்பலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்களாக உள்ள இடைநிலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியாளர்களை கொண்டு நிரப்பிடும் வரை தகுதி பெற்ற பணிநாடுனர்களை கொண்டு சம்மந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக நிரப்பி கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு குழு மூலம் தேர்வு செய்யும் பணிநாடுனர்களது பணி முற்றிலும் தற்காலிகமானது. நிரந்தர பணியாளர்களை கொண்டு காலிப்பணியிடம் நிரப்பப்படும் நாள் முதல் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்பட்ட தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

காலிப்பணியிட விவரங்களை பெரம்பலூர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) அலுவலக அறிவிப்பு பலகையினை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் தொகுப்பூதிய பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. மேலும் தகவல்களுக்கு தொடர்புடைய அலுவலகத்தை அணுகலாம், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story