பள்ளி கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குனர் நியமனம்


பள்ளி கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குனர் நியமனம்
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 7 Jun 2023 2:48 AM GMT)

பள்ளி கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குனர் நியமனத்துக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்பு அளித்துள்ளது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வி துறையில் காலம் காலமாக இருந்து வந்த இயக்குனர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஆணையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இயக்குனர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஆணையர் பணியிடத்தை உருவாக்கி ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்தனர். இதனால் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தியதில், பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில், மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது மற்றும் வினாத்தாள்கள் தயாரிப்பதில் என அனைத்து செயல்பாடுகளிலும் குளறுபடி ஏற்பட்டது. இதனால் தலைமை ஆசிரியர்களும், கல்வித்துறை அலுவலர்களும் சிரமம் அடைந்தனர். ஆணையர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் இயக்குனர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சங்கத்தின் மாநிலத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான தியாகராஜன் கோரிக்கை விடுத்தார். ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் கல்வித்துறையில் மீண்டும் இயக்குனர் பணியிடம் உருவாக்கப்பட்டு இயக்குனராக அறிவொளி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எங்களது கோரிக்கையை ஏற்ற முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story