தற்காலிக ஆசிரியர் பணிக்கு குவிந்த விண்ணப்பங்கள்


தற்காலிக ஆசிரியர் பணிக்கு குவிந்த விண்ணப்பங்கள்
x

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

மதுரை
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. இருப்பினும் மதுரை ஐகோர்ட்டு கிளையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட 13 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் காலி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தடை உத்தரவை நீக்க வலியுறுத்தி பள்ளி கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு தடையை நீக்க மறுத்து விட்டது. இதனால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று நூற்றுக்கணக்கான ஆசிரிய பட்டதாரிகள் குவிந்தனர். அவர்கள் அங்கு அலுவலக பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியில் தங்களது விண்ணப்பங்களை பெட்டி நிரம்பி வழிந்த போதிலும் அதற்குள் தங்களது விண்ணப்பங்களை திணிப்பதில் குறியாக இருந்தனர். கல்வித்துறை அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவு வரும் வரை எந்த முடிவும் எடுக்க முடியாது என்று அவர்களிடம் வலியுறுத்தியும் கூட அதனை கேட்க மறுத்து முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வெளியே விற்பனை செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து அலுவலகத்தின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story