போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

வேலூரில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலூர்

போதைப்பொருள் ஒழிப்பு

வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் டவுன்ஹால் அருகே நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, ஊரீசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எபினேசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஊர்வலத்தில் கலந்து கொண்டு மாணவர்களுடன் நடந்து சென்று போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு

ஊர்வலம் டவுன்ஹாலில் இருந்து புறப்பட்டு அண்ணாசாலை, தெற்கு போலீஸ் நிலையம் வழியாக சென்று ஊரீசு கல்லூரி அருகே நிறைவடைந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு, போதையில் நீ, வீதியில் குடும்பம், மது நாட்டிற்கும், வீட்டிற்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பேபி, பழனிமுத்து, டில்லிபாபு, பார்த்தசாரதி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியை வித்யா பத்மினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story