தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே இல்லை - அண்ணாமலை


தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே இல்லை - அண்ணாமலை
x

தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே இல்லை என அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே இல்லை என அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

பா.ஜனதா பொதுக்கூட்டம்

கும்பகோணத்தில் பா.ஜனதா கட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

2014-ம் ஆண்டுக்கு பிறகு மத்தியஅரசு 11.23 கோடி கழிவறைகளை கட்டி உள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து 2014-ம் ஆண்டு வரை 5.5 கோடி கழிவறைகள் தான் கட்டப்பட்டு இருந்தன.

10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்த அரசு மெஜாரிட்டி இல்லாத அரசாக இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சிகள் தங்கள் பங்குக்கு அமைச்சர் பதவியை வாங்கி கொள்ளையடித்தனர்.

ஊழல் புகார்

தற்போது தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்று கூறலாம். ஆனால் 8 ஆண்டுகள் ஆன பின்பும் மத்திய அரசில் உள்ள ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் புகார் சொல்ல முடியவில்லை. தமிழ்நாடு விஞ்ஞான ஊழலில் முன்னணியில் உள்ளது. அதுமட்டுமல்ல மாநிலம் முழுவதும் விசாரணை கைதிகள் இறப்பது வாடிக்கையாகிவிட்டது. தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா விற்கப்படுகிறது.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்து விட்டால், மத்திய அரசிடம் பேசி இந்தியாவிலேயே ஆன்மிக மாவட்டமாக கும்பகோணத்தை அறிவித்து பல கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story